by Staff Writer 29-12-2021 | 3:05 PM
Colombo (News 1st) ஆபாசமான வௌியீடுகளுக்கு தடை விதிப்பதற்கான சட்டமூலம் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவிழக்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி , நீதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆபாசமானதாகவுள்ள ஏதேனும் ஒன்றை வௌியிடுதல், விநியோகித்தல், விற்பனை செய்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பவற்றை தடை செய்வதற்கும் ஆபாசமான வௌியீடுகள் கட்டளைச் சட்டத்தை நீக்குவதற்குமான குறித்த சட்டமூலம் தொடர்பில் சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தரப்பினர்கள் அண்மையில் முன்வைத்த கருத்துகளை ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டமூலத்தை தயாரிக்கும் போது, படைப்பாளர்களின் கருத்து சுதந்திரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிவில் அமைப்புகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்ததன் பின்னர், திருத்த சட்டமூலத்தை அமைச்சரவையில் மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அலி சப்ரி ஆலோசனை வழங்கியதாக நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சிறார்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பதற்காகவே குறித்த சட்டத்தை கொண்டுவர எதிர்பார்த்ததாகவும், பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் அதனை கொண்டுவரவில்லை எனவும் நீதி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.