by Staff Writer 28-12-2021 | 7:27 PM
Colombo (News 1st) பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க சீனாவும் இந்தியாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கூறினார்.
வட மாகாணத்திலுள்ள இரண்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் செயற்றிட்டங்களுக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வதற்கு சீனாவும் இந்தியாவும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. யாழ். பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டமும் இதில் ஒன்றாகும்.
இதனை தவிர, ஏற்கனவே சீனாவின் அட்டைப் பண்ணை அமைந்துள்ள கிளிநொச்சி கௌதாரிமுனையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணைந்த நிதி உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 12,600 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியிருந்தது.
இதனிடையே, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong-இன் வட மாகாணத்திற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இம்மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனைப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் என அவர் வினவியிருந்தார்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கௌதாரிமுனை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும்.
இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை, கிளிநொச்சி கௌதாரிமுனை தெற்கு கடற்கரையில் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதற்கான காணியினை ஒதுக்கித் தருமாறு பூநகரி பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் காணி சுவீகரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி வர்த்தமானியும் வௌியிடப்பட்டது.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்கான கள ஆய்வினை மேற்கொள்வதற்கு இரண்டு இந்திய பிரஜைகளுக்கு அனுமதி வழங்குமாறு கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை பூநகரி பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.
காற்றாலை மின் திட்டத்திற்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை கோரிய காணியின் அமைவிடமான கௌதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் இதுவரையில் எதுவித அறிவித்தல் பலகைகளும், கட்டுமானப் பணிகளும் இடம்பெறாமையை அவதானிக்க முடிந்தது.
காற்றாலை மின் திட்டத்திற்காக இலங்கை நிறைபெறுதகு சக்தி அதிகாரசபை கிளிநொச்சி கௌதாரிமுனை தெற்குக் கடற்கரை பகுதியில் காணி கோரியுள்ளமை தொடர்பில் பிரதேசத்திலுள்ள சில தரப்பினர் கருத்து வௌியிட்டனர்.
மக்களின் வாழ்வாதாரமும் கால்நடைகளும் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்திற்கு மக்கள் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.
கௌதாரிமுனை பிரதேசத்தை அண்மித்து சீன இலங்கை கூட்டு தொழில் முயற்சியான கடலட்டைப் பண்ணையும் அமைந்துள்ளது.
இந்த பண்ணையின் தாய் நிறுவனமான யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள கடலட்டை இனப்பெருக்க நிலையத்திற்கு இம்மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கான சீன தூதுவர் விஜயம் செய்திருந்தார்.
சீன - இலங்கை கூட்டு நிறுவனமாக இயங்கும் குயி-லான் கடலட்டை இனப்பெருக்க நிலையத்திற்கு விஜயம் செய்த சீன தூதுவர் Qi Zhenhong அதன் செயற்பாடுகளையும் இதன்போது பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் - அரியாலையிலுள்ள சீன கடலட்டை இனப்பெருக்க நிலையத்திலிருந்து 6 கடல் மைல் தொலைவில் கிளிநொச்சி கௌதாரிமுனை கல்முனை பகுதியிலுள்ள சீன கடலட்டை பண்ணையின் அமைவிடமுள்ளது.
சீனாவும் இந்தியாவும் நாட்டில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை பெறுவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை இரு நாடுகளும் தம்வசப்படுத்தியுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலாபம் கிடைக்கும் வர்த்தக பங்குகளின் பெரும்பான்மை சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமாக உள்ளது.
கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அதிகளவிலான பங்குகள் சீனா வசமுள்ளதுடன், அதனை அண்மித்த துறைமுக நகரத் திட்டத்தையும் சீனா முன்னெடுக்கின்றது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அதிகளவிலான பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, திருகோணமலை எண்ணெய் குதங்கள் திட்டத்திற்காக ஒரு மாதத்திற்குள் இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில 'த ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் குதங்கள் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளன.
இதற்கமைய, இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கரையோர பகுதிகள் பலவற்றை இந்தியாவும் சீனாவும் ஏற்கனவே கபளீகரம் செய்துள்ளன.
இந்த பின்புலத்திலேயே மேலும் பல முக்கிய இடங்களில் தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டும் முயற்சியில் அந்நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.