by Staff Writer 28-12-2021 | 3:42 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கெளதாரிமுனை பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் படகு மூலம் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு தப்பிச்சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயணித்த படகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவருடன் மொத்தம் 4 சந்தேகநபர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32 வயதான பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்று மோதல் இடம்பெற்றதுடன், இதன்போது ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ். ஆனைக்கோட்டையை சேர்ந்த 22 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று (27) மாலை இளைஞரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.