குறைந்த எடையுடைய சிறுவர்கள் உள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

by Staff Writer 28-12-2021 | 1:19 PM
Colombo (News 1st) குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு குறைந்தவர்களில் உயரத்திற்கு ஏற்ற நிறை காணப்படாதவர்களே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறைந்த நிறையுடையவர்களாக கருதப்படுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவில் குறைந்த நிறையுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வௌிப்படுத்தப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா, மாலைதீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் குறைந்த நிறையுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக குறித்த நாடுகளில் குறைந்த நிறையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் போசனைக் குறைபாடு காணப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.