பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம்: விசேட விசாரணை

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

by Staff Writer 26-12-2021 | 3:05 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். இதனிடையே, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் இன்று (26) நடத்தப்படவுள்ளது. நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர். இதன்போது காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் இரண்டு பொலிஸ் உத்திகேத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதன் பின்னர், T-56 ரக இரண்டு துப்பாக்கிகளும் 19 ரவைகளுடன் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் குறித்த சார்ஜன்ட் ஆஜராகியதன் பின்னர் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நேற்று (25) மாலை சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்