சுனாமி பேரலை தாக்கத்தின் 17 ஆவது வருட நினைவேந்தல்

சுனாமி பேரலை தாக்கத்தின் 17 ஆவது வருட நினைவேந்தல்...

by Staff Writer 26-12-2021 | 6:42 PM
Colombo (News 1st) சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. சுனாமியால் உயிரிழந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) நினைவுகூறப்பட்டனர். சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (26) தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று (26) காலை 9.25 மணி தொடக்கம் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் விளக்கேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார். பெரேலியவில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த ரயில் பயணிகளின் உறவினர்கள் இன்று காலை 6.50க்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தனர். ரயில் பெரேலியவில் நிறுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சுனாமியால் உயிர்நீத்த உறவுகள் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டனர்.