அனைவராலும் பேசப்பட்ட சுனாமி பேபி 81

அனைவராலும் பேசப்பட்ட சுனாமி பேபி 81

by Staff Writer 26-12-2021 | 7:36 PM
Colombo (News 1st) சுனாமி பேரலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்த சுனாமி பேபி 81. சுனாமி பேரிடரால் கல்முனை வைத்தியசாலை முழுவதுமாக அல்லோலகல்லப்பட்டிருந்தது. கல்முனை வைத்தியசாலையின் தொட்டிலில் தவழ்ந்த அந்தக் குழந்தைக்கு உரிமை கோரி 9 தாய்மார் குரலெழுப்பினர். 9 பெற்றோரினது மரபணு பரிசோதனைகளை வழங்குமாறு நீதிமன்றம் பணித்தது. அன்றிலிருந்து 52 ஆவது நாளில் சுனாமி பேபி 81, ஜெயராஜ் - ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு குழந்தையாக இருந்த சுனாமி பேபி 81 என்றழைக்கப்பட்ட அபிலாஷ், 17 ஆண்டுகளின் பின்னர் இன்று மட்டக்களப்பு - குருக்கள்மடத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருவதுடன் மட்டக்களப்பு - செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தற்போது உயர்தரத்தின் கலைப்பிரிவில் கல்விகற்று வருகின்றார். அவருடைய இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (26) அவர் அஞ்சலி செலுத்தியதுடன் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.