பங்களாதேஷ் நோக்கி நகரவுள்ள கப்பல்

பங்களாதேஷ் நோக்கி நகரவுள்ள திருகோணமலையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்

by Staff Writer 25-12-2021 | 7:29 PM
Colombo (News 1st) திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல் இன்று (25) இரவு அல்லது நாளை (26) பங்களாதேஷ் நோக்கி பயணிக்கவுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இந்த கப்பல் பாரியளவில் கனிய பொருட்களை கொண்டுசெல்வதற்கு பயன்படுத்தக்கூடியது எனவும் ஆழ்கடலில் அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாதது எனவும் கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த கப்பல் ஆழ்கடலில் அகழ்வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என வௌியிடப்படும் தகவல் பொய்யானது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. NAVIMAR 3 என்ற கப்பலும் AM MERMAID என்ற கனிய பொருட்களை கொண்டுசெல்லும் கப்பலும் கடந்த 15 ஆம் திகதி கிழக்கு கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டன. ஐக்கிய அரபு எமிர் இராஜ்ஜியத்திலிருந்து பங்களாதேஷுக்கு சுண்ணாம்புக்கற்களை கொண்டுசெல்லும் குறித்த கப்பலில் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் அதனை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்வதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பாரியளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால், மட்டக்களப்பு -  வாழைச்சேனையை அண்மித்த கடற்பரப்பில் பாதுகாப்பாக நங்கூரமிடுவதற்கு கப்பல் பணியாளர்கள் தீர்மானித்ததாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் இலங்கை கடற்படையினர் விடயம் குறித்து ஆராய்ந்துள்ளதுடன், கப்பலுக்கு சொந்தமான உள்நாட்டு நிறுவனத்தினூடாக தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொண்டதன் பின்னர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு குறித்த கப்பல் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், தேவையான ஏனைய வசதிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அங்கிருந்து தனது பயணத்தை கப்பல் ஆரம்பிக்கவுள்ளது. இன்று அல்லது நாளை காலை குறித்த கப்பல் பங்களாதேஷ் நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.