ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகள்

ரயில்களில் பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகள்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2021 | 4:19 pm

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.

பாதுகாப்பற்ற ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைத்துக்கொண்டமை, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை போக்குவரத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதியளவு ரயில்கள் இல்லாமையினால், பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்.

அதேபோன்று, புகையிரத அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆசன முன்பதிவுகள் செய்யப்பட்ட பயணிகளுக்காக மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறினார்.

காலி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்காமை காரணமாக பயணச்சீட்டின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பல ரயில் நிலையங்களிலும் ரயில் போக்குவரத்து பயணச்சீட்டு வழங்கப்படாமை காரணமாக பயணிகள் பயணச்சீட்டின்றியே பயணித்ததாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்