இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு யாழில் பாரிய எதிர்ப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு யாழில் பாரிய எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2021 | 8:07 pm

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றல் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மீனவர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

A9 வீதியை மறித்து மீனவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதால், போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அரசுடைமையாக்கி, மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் இதன்போது கூறினார்.

கடற்றொழில் அமைச்சரின் உறுதிமொழியினையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களையும் அவர்தம் 10 படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்தாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாம்பன் மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதுடன், தங்கச்சிமடம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திருக்கலாம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழகத்தின் தங்கச்சிமடம் மீனவர்களின் உறவினர்களை சந்தித்து நிவாரணம் வழங்கியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்