by Staff Writer 23-12-2021 | 8:04 PM
Colombo (News 1st) அதிகரித்துள்ள எரிபொருள் விலையை குறைக்குமாறு வலியுறுத்தியும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இன்று மாலை எதிர்ப்பு போராட்டம் காலி - பலப்பிட்டியவில் முன்னெடுக்கப்பட்டது.
பலப்பிட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் கமல் ஜயந்த உள்ளிட்டவர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு , விலைவாசி அதிகரிப்பினால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினால் நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இன்று மாலை மஹரகம நகரின் மத்தியில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, கிரிபத்கொட நகரில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.
எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனுராதபுரத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தம்புளை நகரின் மத்தியிலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் ஒத்திவைப்பு வேளையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.