டிசம்பர் இறுதிக்குள் கையிருப்பு அதிகரிக்கும்: CBSL

டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் கையிருப்பு அதிகரிக்கும் என மத்திய வங்கி நம்பிக்கை 

by Staff Writer 23-12-2021 | 6:40 PM
Colombo (News 1st) டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு வழிமுறையில் அந்நிய செலாவணி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்திய மத்திய வங்கிகளுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதிகள் உள்ளடங்கலாக மத்திய வங்கிக்கான முக்கிய வெளிநாட்டு செலாவணியாக 2 பில்லியன் டொலர் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசாங்கம் இரு தரப்பு கடன் வசதிகள் மற்றும் பல தரப்பு அமைப்புகள் ஊடாக கடன் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் புறம்பாக, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட வெளிநாட்டு விஜயங்களின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட செலாவணி வசதிகளும் கிடைக்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வௌியிட்டுள்ளது. வௌிநாட்டில் பணிபுரிவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்பு முறைமை மற்றும் ஏற்றுமதி வருமானத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதன் ஊடாக மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இருப்பை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்காக புறப்பட்டுச் செல்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால், வெளிநாட்டுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது அவதானிக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் தணிந்து 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் சாதகமான நிலைமை ஏற்படும் என்பது மத்திய வங்கியின் நம்பிக்கையாகும். COVID-19 பெருந்தொற்று நிலைமை காரணமாக எழுந்த சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை கடனை மீளச் செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.