by Bella Dalima 23-12-2021 | 3:39 PM
Colombo (News 1st) மடகாஸ்கரில் ஹெலிகொப்டரில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தால் கடலில் குதித்து 12 மணி நேரம் நீந்தி அமைச்சர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலிலுள்ள தீவு நாடான மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே கடந்த 19 ஆம் திகதி 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 39 பேர் உயிரிழந்தனர். 68 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பல் விபத்து நிகழ்ந்ததும் மீட்புப் பணியில் ஈடுபட சென்ற மீட்புப்படையுடன் அந்நாட்டின் அமைச்சர் Serge Gelle-வும் ஹெலிகொப்டரில் சென்றார். அப்போது திடீரென ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில், அமைச்சர் கடலில் குதித்து 12 மணி நேரம் நீந்தி மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார்.
57 வயதான இவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் அமைச்சர், 'திங்கள் கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பித்த நீச்சல் மறுநாள் காலை 7.30 வரை நீடித்தது. பின் மஹாம்போ தீவை அடைந்தேன். நான் இறப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை' என தெரிவித்திருக்கிறார்.