தமிழகத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

இலங்கையில் 68 மீனவர்கள் கைது;  தமிழகத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

by Staff Writer 22-12-2021 | 7:22 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தின் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று தங்கச்சிமடத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மீனவர்கள் என சுமார் 1000 பேர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், கைதாகியுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படாதபட்சத்தில் எதிர்வரும் முதலாம் திகதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், அவர்களின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்படுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீனவர்களை விரைந்து விடுதலை செய்ய மத்திய அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன், மீனவர்களுக்காக சட்டத்தரணிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மாத்திரம், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடித்த 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 10 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நயினாதீவில் நேற்று முன்தினம் (20) கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தலைமன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 43 பேரும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.