வடக்கில் பாதுகாப்பற்ற கிணறுகளால் பறிபோகும் உயிர்கள்

வடக்கில் பாதுகாப்பற்ற கிணறுகளால் பறிபோகும் உயிர்கள்

வடக்கில் பாதுகாப்பற்ற கிணறுகளால் பறிபோகும் உயிர்கள்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2021 | 6:40 pm

Colombo (News 1st) வட மாகாணத்தில் கடந்த 3 நாட்களுக்குள் கிணற்றில் வீழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (19) இதுவரையான காலப்பகுதியில் கிணற்றில் வீழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற கிணறுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்மையும் கவனயீனமும் இத்தகைய சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

அண்மைய சம்பவமாக நேற்று முன்தினம் (20) வவுனியா கொக்குவெளி பகுதியில் தோட்டக்கிணற்றில் குளிக்கச்சென்ற 16 வயதான சிறுவன், நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம்.

அத்துடன், கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் 4 வயது சிறுமியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.​

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சி, திக்கம் பகுதியிலும் 8 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுகின்றன.

வயல்கள் மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் அதிகளவில் பாதுகாப்பற்ற கிணறுகள் உள்ளன.

மன்னார் மாவட்டத்தின் அடம்பன், ஆண்டான்குளம், பரப்புக்கடந்தான் ஆகிய பகுதிகளில் சுமார் 20 தொடக்கம் 25 பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இவைகள் முன்னர் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தற்போது கைவிடப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதனால், உயிர் ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளதாக மக்கள் கூறினர்.

கால்நடைகள் வீழ்ந்து உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு , சூரிபுரம் , புதுக்குடியிருப்பு , கைவேலி , சுதந்திரபுரம், தேவிபுரம் , உடையார்கட்டு, விசுவமடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிகளவான பாதுகாப்பற்ற கிணறுகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சமூகத்திலும் பெற்றோரிடமும் பாதுகாப்பற்ற கிணறுகள் தொடர்பில் போதிய விழிப்புணர்வு இன்மையே இவ்வாறான விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்