3 நாட்களில்  68 இந்திய மீனவர்கள் கைது; 10 படகுகள் கைப்பற்றல் 

by Staff Writer 21-12-2021 | 8:06 PM
Colombo (News 1st) கடந்த 3 நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 10 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையிலிருந்து நேற்று (20) வரையான 3 நாட்களில் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த 10 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சிறைப்பிடிக்கப்பட்டமையை கண்டித்து, மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தமிழக முதல்வர் வௌிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை, திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து இன்று கையளித்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நயினாதீவில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன. நேற்றிரவு கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களில் ஒருவர் சிறுவராக உள்ளதால், அவரை சிறைச்சாலை அத்தியட்சகரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், ஏனைய 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 43 பேரும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தலைமன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.