ராகலை தீ சம்பவம்: வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ராகலை தீ சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

by Staff Writer 21-12-2021 | 7:01 AM
Colombo (News 1st) ராகலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (20) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை Skype தொழில்நுட்பத்தினூடாக பார்வையிட்ட வலப்பனை நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச, வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். நேற்று (20) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உயிர் தப்பிய நபர், ராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 72 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த விசாரணைகளின் போது சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற ஐந்து விசாரணைகளின் போதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுவரெலியா - ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடொன்றில் கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இரவு தீ பரவியது. குறித்த வீட்டில் 06 பேர் வசித்து வந்த நிலையில் ஒரு வயது மற்றும் 12 வயதான இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.