பட்டக் கயிற்றில் 100 அடிகளுக்கு மேல் அந்தரத்தில் தொங்கியவர்

by Staff Writer 21-12-2021 | 5:53 PM
Colombo (News 1st) பட்டம் விட சென்றவர் கயிற்றில் தொங்கியவாறு உயரப் பறந்த சம்பவம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி பகுதியில் பதிவாகியுள்ளது. காற்றினால் மேலெழுந்த பட்டக் கயிற்றின் துணை கொண்டு திகிலுடன் அந்தரத்தில் பறந்து நிலத்தில் தொப்பென வீழ்ந்த நடராசா மனோகரனின் அனுபவம் பார்ப்பவர்க்கு சுகமாய் இருந்தாலும் அவருக்கோ சுமையானது. புலோலி - கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை (18) பட்டம் ஏற்றியுள்ளனர். பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையில், 27 வயதான இளம் குடும்பஸ்தர் நடராசா மனோகரன் பட்டத்தின் கயிற்றை விடாது பற்றியுள்ளார். பட்டம் உயரப் பறக்கும் வேகத்தில் குறித்த நபரும் கயிற்றுடன் மேலே கொண்டு செல்லப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 5 நிமிடங்கள் வரை பட்டத்தின் கயிற்றை இறுக்கிப் பிடித்தவாறு செய்வதறியாது 100 அடிகளுக்கு மேல் அந்தரத்தில் மனோகரன் தொங்கியுள்ளார். பட்டத்தின் கயிர் சுமார் 20 அடிகள் வரை கீழிறங்கியபோது கைகளை விட்டவர் கீழே வீழ்ந்துள்ளார். அதன் பின்னர் சுயநினைவை இழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் வீழ்ந்த இளைஞர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகளின் பின்னர் அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.