சேர்மானங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம்

by Staff Writer 21-12-2021 | 3:58 PM
Colombo (News 1st) அண்மையில் எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம் என எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பொல இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனை கூறினார். எரிவாயு விபத்துகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சமூகத்தில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளதாக பேராசிரியர் இதன்போது சுட்டிக்காட்டினார். கடந்த நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சிலிண்டரில் இருந்த எரிவாயு சேர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்ததாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சேர்மானங்களில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஷாந்த வல்பொல மேலும் கூறினார்.