by Staff Writer 20-12-2021 | 8:38 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மூங்கிலாறு கிராமத்தில் இடம்பெற்ற 13 வயதான யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறுமியின் பூதவுடல் நேற்று (19) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு - மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமியான யோகராசா நிதர்சனா நேற்று முன்தினம் (18) சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கைது செய்யப்பட்டுள்ளவர் பிரதான சந்தேகநபரா என்பது இதுவரை தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா இன்று (20) சென்றிருந்தார்.
இராஜாங்க அமைச்சரும் அரச அதிகாரிகளும் அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினர்.
இதனிடையே, சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மூங்கிலாறு கிராம மக்கள் இன்று (20) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று இராஜாங்க அமைச்சர் திரும்பியபோது வாகனத்தை மறித்து மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இராஜாங்க அமைச்சரின் வாகனம் பயணிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுவர்கள் பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (20) கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், அரசாங்க அதிபர் க. விமலநாதன், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.