சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீள மூடப்படுமா?

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுமா?

by Staff Writer 19-12-2021 | 2:24 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுத்திகரிப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்ட மசகு எண்ணெய் நாட்டை வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொள்வனவு செய்யப்படும் மசகு எண்ணெய் நாட்டை வந்தடைய சாதாரணமாக 90 நாட்கள் ஆகின்றன. கடந்த காலங்களில் அந்நிய செலாவணி தொடர்பிலான பிரச்சினை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, தற்போது முற்பதிவு செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. இந்த நிலையில், மசகு எண்ணெய் நாட்டை வந்தடையும் வரை ஜனவரி மாதத்தின் முதல் வாரம் முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எண்ணெய் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் மசகு எண்ணெய் வகையுடன் ஒத்த இரு மசகு எண்ணெய் வகைகள் தொடர்பில் விலைமனு கோரப்பட்டுள்ளதுடன், அந்த மசகு எண்ணையைப் பெற முடிந்தால் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் நிலை ஏற்படாது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.