T20-இல் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

T20-இல் சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

by Bella Dalima 17-12-2021 | 5:39 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஒரே வருடத்தில் அதிக T20 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான்- மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்ற நிலையில், நேற்று 3 ஆவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 208 என்ற இமாலய இலக்கை 18.5 ஓவரில் எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளை Whitewash செய்தது. பாகிஸ்தானின் வெற்றிக்கு அந்த அணியின் ஆரம்ப வீரரும், விக்கெட் காப்பாளருமான முகமது ரிஸ்வான் அதிரடி முக்கிய காரணம். அவர் 45 பந்தில் 87 ஓட்டங்களை குவித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். 87 ஓட்டங்களை விளாசியதன் மூலம் இந்த வருடம் T20-யில் 2 ,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். ரிஸ்வான் T20-யில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். T20 உலகக்கிண்ணத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த ரிஸ்வானின் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர், ஒரே வருடத்தில் 2,000 ஓட்டங்களைத் தாண்டிய முதல் சர்வதேச வீரர் என்ற அசுர சாதனையை பதிவு செய்துள்ளார்.