பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளி; 12 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளி; 12 பேர் பலி

by Bella Dalima 17-12-2021 | 6:41 PM
Colombo (News 1st) பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த ராய் (Rai) சூறாவளியின் தாக்கத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 13 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சூறாவளியின் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் பிரபலமான சுற்றுலாத்தலமான Siargao தீவும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தீவில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன், மின் விநியோகக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. குறித்த தீவின் பெரும்பாலான பகுதிகளில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறித்த தீவிலுள்ள பிரதான விமான நிலையத்தின் முனையம் சேதமடைந்துள்ளது. இருப்பினும், ஓடுபாதை பாதிப்படையாமல் இருப்பதனால், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய் சூறாவளி கரையைக் கடக்கும் போது, பலத்த மழை பெய்ததுடன், மணித்தியாலத்திற்கு 195 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. சூறாவளியின் பாதையில் அமைந்திருந்த தீவுகளிலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. குறித்த தீவுகளிலுள்ள வீடுகள் நிர்மூலமாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.