by Staff Writer 16-12-2021 | 8:42 PM
Colombo (News 1st) நாட்டில் சமையல் எரிவாயு நெருக்கடி நீடிக்கின்ற நிலையில், LNG எனப்படும் இயற்கை வாயுவைக் களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் நெருக்கடி நிலை தொடர்கின்றது.
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 5 தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பேராயர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் ஆகியன சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களுக்கு சார்பாக, உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்துள்ளமை இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்து சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னம் கோரிக்கை விடுத்தார்.
அடிப்படை உரிமை மனுவினை தாக்கல் செய்யும்போது, ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை விடயம் இதில் நிறைவேற்றப்படவில்லை என நான்கு ஆவணங்களை சமர்ப்பித்து சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கைக்கு அமைய, எரிசக்தியை பெறும்போது அல்லது வழங்கும்போது, அதன் அதிகாரம் எரிசக்தி அமைச்சருக்குக் கிடைக்கும் என்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாகும்.
இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லை என்ற போதிலும், விலை மனுக்கோரல் அவசியம் என சட்ட மா அதிபர் தமது அடிப்படை ஆட்சேபனையில் சுட்டிக்காட்டினார்.
ஒரு மாதத்திற்குள் மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டியதன் தேவை இந்த விடயத்தில் ஏற்படவில்லை என, கர்தினால் மற்றும் எல்லே குணவங்ச தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டமா அதிபரின் அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து சுட்டிக்காட்டினார்.
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அறிந்துகொண்டவுடன் மனுத்தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த உடன்படிக்கைக்கு, மூன்று அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிற்கு அமைய, அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அவர்களின் நிலைப்பாட்டில் உண்மை உள்ளது என்பதாலேயே அவர்கள் நீக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி வாதிட்டார்.
மனுக்களுக்கு எதிரான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிரதமர், நிதி அமைச்சர் அல்லது வேறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு சந்தர்ப்பமுள்ள போதிலும், ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையின் செயலாளர் மற்றும் உடன்படிக்கையை எதிர்க்கும் மூன்று அமைச்சர்கள், அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் முன்வைத்துள்ள விடயங்களில் காணப்படும் முரண்பாடுகள் மூலம், இரண்டு தரப்பில் ஒரு தரப்பு பொய்கூறுவதாக புலப்படுவதாக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தமது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
தேசிய சிக்கல், தேசிய பிரச்சினை ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தை நாடுவதற்கு குறிப்பிட்ட காலப்பகுதி தேவையில்லை என, இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை நாட்டின் தேசிய எரிசக்தி கொள்கைக்கு முரணானது எனவும், நாட்டின் தேசிய எரிசக்தி வௌிநாட்டிற்கு வழங்கப்படுவது ஒட்டுமொத்த நாட்டினதும் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை காலை 10 மணிக்கு மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.