படகுப்பாதை அனர்த்தம்: 3 சந்தேகநபர்களுக்கு பிணை

கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம்: 3 சந்தேகநபர்களுக்கு பிணை

by Staff Writer 16-12-2021 | 11:26 AM
Colombo (News 1st) கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு Zoom தொழில்நுட்பத்தினூடாக இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மூன்று சந்தேகநபர்களும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பிணை வழங்கப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். படகுப்பாதை விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிண்ணியா நகர சபை தவிசாளர் கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப்பாதை விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தியே 06 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவரும் உயிரிழந்தனர். அதற்கமைய மாணவர்கள் உள்ளிட்ட 08 பேர் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.