புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவும் தரமற்றது

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவும் தரமற்றது; விநியோகத்தை இடைநிறுத்துமாறு உத்தரவு

by Staff Writer 15-12-2021 | 8:13 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்த சமையல் எரிவாயுவை நிராகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த எரிவாயுவில் உள்ளடங்கியுள்ள Mercaptan எனும் கலவை தரமற்றது என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க குறிப்பிட்டார். இதற்கிணங்க, குறித்த கப்பலிலுள்ள எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கசிவு காரணமாக இன்றும் எரிவாயு அடுப்புகள் தீப்பற்றியுள்ளன. யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) மாலை எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது. மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, திருகோணமலை - கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது. கல்முனை - பாண்டியிருப்பு, அரசடி அம்மன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது. கம்பளை - உடபளாத்த, அட்டபாகை பகுதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு கசிவு காரணமாக அடுப்பொன்று தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.