சீனா மற்றும் இந்தியாவால் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிடைக்கக்கூடும்: சீன தூதுவர் தெரிவிப்பு

by Bella Dalima 15-12-2021 | 7:32 PM
Colombo (News 1st) இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (15) சென்ற சீன தூதுவர் சில இடங்களை பார்வையிட்டதுடன், சில சந்திப்புகளிலும் கலந்துகொண்டிருந்தார். இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணம் - பருத்தித்துறைமுனை பகுதிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து, யாழ். நூலகத்தை அவர் பார்வையிட்டார். மடிக்கணினி மற்றும் புத்தகங்கள் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டன. யாழ். பொது நூலகத்திலுள்ள இந்தியன் கோர்னரையும் சீன தூதுவர் பார்வையிட்டார். இந்த பயணத்தை நீண்ட நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்தாலும், COVID தொற்று காரணமாக அது சாத்தியமாகவில்லை என Qi Zhenhong இதன்போது குறிப்பிட்டார். இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் எதிர்காலத்தில் செல்லவுள்ளதாக அவர் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் சிறந்த நண்பர்கள். சிறந்த பங்காளர்கள். சிறந்த அயலவர்கள். சீனாவும் இந்தியாவும் இலங்கையுடன் நட்பை பேண முடியும் என நான் நினைக்கிறேன். இரு தரப்பினாலும் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிட்ட முடியும்
என Qi Zhenhong தெரிவித்தார். இதேவேளை, சீன தூதுவரின் வருகை காரணமாக இன்று வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. வவுனியாவிலுள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை சென்ற சீன தூதுவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். தூதுவரின் வருகை காரணமாக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.