புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அதானி நிறுவனத்திடம் கோரிக்கை

by Bella Dalima 14-12-2021 | 8:38 PM
Colombo (News 1st) சீனா பல திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்தியாவும் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் சமீபத்திய முயற்சியாக வடக்கு கடற்பரப்பின் பூநகரி மற்றும் மன்னார் தீவுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதானி நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வடக்கு தீவக பகுதிகள் மூன்றில் சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிய நிலையில், மூன்று பிராந்தியங்களுக்குமான பாதுகாப்பு நிலைப்பாடு தொடர்பிலான விடயதானங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு உரித்தான Adani Green Energy நிறுவனத்திடம் 500 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் இரண்டு மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரால் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இந்தியாவை அண்மித்துள்ள மன்னார் மற்றும் வடக்கின் உபாய மார்க்கமான பூநகரியில் இந்தத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு இந்தியாவின் அதானி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதனிடையே நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 441.42 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குவதற்கு இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி என்று அறியப்படும் EXIM வங்கி தீர்மானித்துள்ளது. நான்கு நீர் திட்டங்களுக்கு இந்த நிதியை பயன்படுத்த முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இதேவேளை உணவு , மருந்து, எரிபொருள் மற்றும் எரிசக்தி துறைகள் தொடர்பில் வழங்கப்படும் நிதியுதவியை மேம்படுத்துவது தொடர்பில் புது டெல்லி இந்த நாட்களில் கலந்துரையாடி வருகின்றது.