பசில் ராஜபக்‌ஸ தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

by Bella Dalima 14-12-2021 | 6:29 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பில் இன்று விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது. அலரி மாளிகையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன், கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியினூடாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் குறித்து இன்றைய செயலமர்வில் கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு தலா 3 மில்லியன் ரூபா வீதம், 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 42,063 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு 04 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 4917 உள்ளூராட்சிமன்றங்களுக்கு 19,668 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்கு 15 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இம்முறை 3,375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று நடைபெற்ற செயலமர்வின் போது, கிராமிய அபிவிருத்து செயற்பாடுகளை உரியவாறு முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.