சீன சேதன பசளைக்கு $6.7 மில்லியன் செலுத்த தீர்மானம்

பக்டீரியா அடங்கிய சீன சேதன பசளைக்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்த தீர்மானம்

by Bella Dalima 14-12-2021 | 8:14 PM
Colombo (News 1st) பாதகமான பக்டீரியா அடங்கியுள்ளதாக இலங்கையின் தாவர தடுப்புக் காப்பு சேவை, இரண்டு தடவைகள் உறுதிப்படுத்திய சீனாவின் சேதனப் பசளைக்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட 2 அமைச்சரவை பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வௌிநாடு சென்றுள்ளதால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் அமைச்சரவை கூடியது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரண்டு அமைச்சரவை பத்திரங்களை நீதி மற்றும் விவசாய அமைச்சர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். Qingdao Seawin Biotech Group Co., Ltd மற்றும் அரசாங்கத்தின் இரண்டு உர நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வணிக நெருக்கடியை இரு தரப்பினரும் இணங்கக்கூடிய நிபந்தனைகளின் அடிப்படையில் சமரசப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்ததாக விவசாய அமைச்சு தெரிவித்தது. இதற்கமைய, இந்த கொடுக்கல் வாங்கலுக்காக சீன நிறுவனம் இலங்கையில் வைப்பிலிட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பிணையை தக்கவைத்துக்கொள்வதற்கும் உடன்படிக்கையில் உள்ள சரத்துக்களுக்கு அமைய திருப்பி அனுப்பப்பட்ட உரத்தின் பெறுமதியில் 75 வீதத்தை செலுத்துவதற்கும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 நாட்களாக இலங்கை கடலில் காணப்பட்ட சீன உரம் ஏற்றப்பட்ட கப்பல் தற்போது நியாயாதிக்க செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் சிங்கப்பூருக்கு சென்றுள்ளது. எவ்வாறாயினும், அந்த உரத்தை கடன் கடிதம் மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகளில் உள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக மீள கொண்டு செல்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.