ஏப்ரல் 21 தாக்குதல்: பாதுகாப்பு சபை கூட்டங்களில் தம்மை புறக்கணித்ததாக ருவன் விஜேவர்தன சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல்: பாதுகாப்பு சபை கூட்டங்களில் தம்மை புறக்கணித்ததாக ருவன் விஜேவர்தன சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல்: பாதுகாப்பு சபை கூட்டங்களில் தம்மை புறக்கணித்ததாக ருவன் விஜேவர்தன சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

14 Dec, 2021 | 6:48 pm

Colombo (News 1st) புலனாய்வுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரை தனக்கு அறிவிக்காமை குறித்து அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தன்னிடம் மன்னிப்பு கோரியதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி வௌிநாட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குறித்த தகவலை தனக்கு ஏன் அறிவிக்கவில்லை என வினவிய போதே, நிலந்த ஜயவர்தன மன்னிப்பு கோரியதாக ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில், முன்னாள் ஜனாதிபதி வௌிநாடுகளுக்கு சென்ற நான்கு சந்தர்ப்பங்களில், பதில் பாதுகாப்பு அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னரே அதற்கான நியமன கடிதம் தமக்கு கிடைத்ததாகவும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட உடன், அப்போது பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, பாதுகாப்பு சபையை கூட்டுமாறு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, நான்கு தடவைகள் அறிவித்தும், பாதுகாப்பு செயலாளரோ, பொலிஸ் மா அதிபரோ அலரி மாளிகைக்கு வருகை தரவில்லை என நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர் சாட்சி வழங்கியுள்ளார்.

அந்த கூட்டத்திற்கு யாரையும் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌிநாட்டிலிருந்து ஆலோசனை வழங்கியதாக பின்னர் தான் அறிந்து கொண்டதாகவும் ருவன் விஜேவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதியின்றி பாதுகாப்பு சபையை கூட்ட முடியாது என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனக்கு அறிவித்ததன் பின்னர், அப்போது வௌிநாட்டிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியூடாக தொடர்புகொள்ள தான் முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட தன்னையும், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என ருவன் விஜேவர்தன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்காமை தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் வினவிய போது, தாங்கள் கலந்துகொள்வதில் விருப்பம் இல்லை என ஜனாதிபதி கூறியதாக பதில் கிடைத்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கட்டட தொகுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அலுவலகத்திற்கு அருகில், பாதுகாப்பு சபை கூட்டம் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு குழுவின் கூட்டம் நடத்தப்பட்டாலும் , அவற்றிற்கான அழைப்பு தமக்கு கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்காது, ஜனாதிபதி வௌிநாடுகளுக்கு செல்லும் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையை எடுப்பதற்கான பொறுப்பு பாதுகாப்பு செயலாளரிடமே காணப்படுவதாகவும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்தும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக, பொறுப்புகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளின் போதே முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, நீதிபதிகளான நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸர்டீன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பங்குத்தந்தையாக கடமையாற்றிய அருட்தந்தை சுதர்சன ரொட்ரிகோ மற்றும் சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய உபாலி ரத்னாயக்க ஆகியோரும் இன்று சாட்சியமளித்தனர்.

வழக்கின் சாட்சி விசாரணை நாளை (15) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்