போரா சமூகத் தலைவர் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தார்

by Staff Writer 11-12-2021 | 6:30 PM
Colombo (News 1st) போரா (Bohra) சமூகத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினையும் சந்தித்துள்ளனர். போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி Seyedina Mufaddal Saifuddin Saheb இன்று முற்பகல் மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி வீட்டில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தாம் நேசிக்கும் இலங்கைக்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, எதிர்காலத்திலும் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்திருப்பதாக போரா சமூகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் COVID ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், இலங்கையின் வளர்ச்சியை தாம் எதிர்பார்த்திருப்பதாக கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. COVID செய்கடமை அறக்கட்டளைக்கு போரா சமூகத்தின் தலைவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தினர் வழங்கும் ஒத்துழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.