சந்தன ஹெட்டியாராச்சி, சுனில் ரத்நாயக்கவிற்கு தடை

சந்தன ஹெட்டியாராச்சி, சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை விதித்தது அமெரிக்கா

by Staff Writer 11-12-2021 | 6:40 PM
Colombo (News 1st) இலங்கையின் பாதுகாப்புத்துறை உறுப்பினர்கள் 2 பேர் உள்ளிட்ட 12 வௌிநாட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய அளவில் மனித உரிமைகளை மீறியமை மற்றும் ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை குறித்து, நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளமையால் இவர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர், அவர்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கான தகுதியை இழப்பார்கள் என அந்நாட்டு இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் புலனாய்வுத்துறை அதிகாரியான சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் படை உறுப்பினரான சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. உகண்டா, சீனா, பெலாரூஸ், பங்களாதேஷ், மெக்சிகோ ஆகிய நாடுகளின் பாதுகாப்பு துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.