பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

இரண்டு வாரங்களில் Booster தடுப்பூசியை ஏற்றி முடிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 10-12-2021 | 3:39 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அடுத்த இரண்டு வாரங்களில் Booster தடுப்பூசியை ஏற்றி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ COVID தடுப்பு விசேட குழுவின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். COVID தடுப்பு விசேட குழு கூட்டம் ஜனாதிபதி செயலத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் பூர்த்தியடைந்தவர்கள் Booster தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும். இதன் பிரகாரம், நாளை (11) முதல் அனைத்து இடங்களிலும் Booster தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும். தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் அதிகளவிலானவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் என்பதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என சுகாதார பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். COVID தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது அவசியமாக்கப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பில் இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி விரைவில் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். COVID பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடுப்பதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என இன்று தீர்மானிக்கப்பட்டது. 16 தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கும் 12 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், தடுப்பூசியை ஏற்றுவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டமிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், விமான நிறுவனங்கள் விமான பயணங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.