மீனவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாழைச்சேனை மீனவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 09-12-2021 | 7:21 PM
Colombo (News 1st) சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - வாழைச்சேனை மீனவர்களின் உறவினர்களும் படகு உரிமையாளர்களும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (08) சந்தித்தனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக குறித்த மீனவர்கள் சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து கடலுக்குச் சென்று, காணாமற்போன நான்கு மீனவர்கள், அந்தமான் தீவு பகுதியில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதுடன், அவர்களின் படகுகளையும் கொண்டு வருவது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனிடையே, புத்தளம் - கற்பிட்டியில் சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச மீனவர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சுமார் 53 பேருக்கு சுருக்கு வலை அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அதை விட சுமார் 120 பேர் சுருக்கு வலைக்கான அனுமதிகளை வழங்குமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்ததாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடித் தொழில் முறைகள் தொடர்பாக புதிய ஒழுங்கு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.