அரச, தனியார் கலப்பு ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை

by Staff Writer 08-12-2021 | 12:45 PM
Colombo (News 1st) 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி அரச மற்றும் அரச, தனியார் கலப்பு ஊழியர் சங்கம் இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தபால் நிலையங்களின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. தாதியர் சங்கம் வட மேல் மாகாணத்தில் இன்று (08) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் காரணமாக குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு வருகை தந்த பெருமளவிலான நோயாளர்கள் இன்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப்பிரிவு, மருந்தகப் பிரிவு, தடுப்பூசி ஏற்றும் பிரிவு, இரசாயனக்கூடம் என்பனவற்றின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொழிற்சங்க நடவடிக்கையால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமையால் நிக்கவெரட்டிய, புத்தளம், கற்பிட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். நீர்கொழும்பு நகரில் சம்பள அதிகரிப்பு உட்பட 04 கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க ஊழியர்கள் இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதான தபாலகம் மற்றும் கொச்சிக்கடை தபாலகம் ஆகியவற்றில் குறைந்தளவிலான ஊழியர்களே கடைமைக்கு சமூகமளித்திருந்தனர். இதனிடையே, திருகோணமலை - கிண்ணியாவில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா நகர சபை ஊழியர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.