ஹெலிகாப்டர் விபத்து: இந்திய முப்படைத் தளபதி உள்ளிட்ட 14 பேர் பலி

ஹெலிகாப்டர் விபத்து: இந்திய முப்படைத் தளபதி உள்ளிட்ட 14 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 8:23 pm

Colombo (News 1st) இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று பலியானார்.

அவர் பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் நீலகிரியில் இன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதிலிருந்த ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரமுகர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் அணியை சேர்ந்த Mi-17V5 ரக ஹெலிகாப்டர் இன்று நண்பகல் 12.20 அளவில் விபத்திற்குள்ளானது.

புது டெல்லியில் உள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் தமிழகத்தின் நீலகிரி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து வீழ்ந்துள்ளது.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் , பணிக்குழு உறுப்பினர்கள் சிலர், 5 விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் விமானத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மலையிலுள்ள வெலிங்டன் பதுகாப்பு சேவைகள் கல்லூரியில் உரையாற்றுவதற்காகவே பிபின் ராவத் சென்றுகொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தரையிறக்கப்படுவதற்கு 10 நிமிடங்கள் இருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் ஹெலிகாப்டரை செலுத்தியவராக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்ற ஜெனரல் பிபின் ராவத், இராணுவ உறவுகள் திணைக்களத்தின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இன்று விபத்துக்குள்ளான MI-17 V5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது அதிநவீன வசதிகளைக் கொண்ட ஹெலிகாப்டராக கருதப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்