அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்; பொதுச்சொத்துக்களை பாதுகாக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்; பொதுச்சொத்துக்களை பாதுகாக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 8:49 pm

Colombo (News 1st) அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கத்தினர் இன்று (08) தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்காவிற்கு விற்பனை செய்கின்றமை, நாட்டிற்கு டொலர் கிடைக்கும் துறைமுகத்தின் காணியையும் சேவையையும் விற்பனை செய்கின்றமை, இலங்கை மின்சார சபையின் பங்குகளை ஆறாக பிரிப்பதற்கான திட்டம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபை வளாகத்திலிருந்து மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் பேரணியாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சென்றனர்.

பெட்ரோலியம், துறைமுகங்கள் ஆகிய தொழிற்சங்கத்தினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

தமது மகஜரை கையளிப்பதற்கு பேரணியில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் 10 பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதனிடையே 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு நகரில் சம்பள அதிகரிப்பு உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு பிரதான தபாலகம் மற்றும் கொச்சிக்கடை தபாலகம் ஆகியவற்றில் குறைந்தளவிலான ஊழியர்களே கடைமைக்கு சமூகமளித்திருந்தனர்.

திருகோணமலை கிண்ணியாவில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் கிண்ணியா நகர சபை ஊழியர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் நிலையங்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் நிறைவுகாண் வைத்திய சுகாதார ஊழியர்கள் இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லையென இவர்கள் கூறினர்.

குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இந்த நடவடிக்கை ஆரம்பமானது.

இதேவேளை, அகில இலங்கை ஆயுர்வேத சேவை சங்கமும் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது.

7500 ரூபா COVID கொடுப்பனவை வழங்குமாறு கோரி இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பொரளை ஆயுர்வேத வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தமையினால், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்