by Staff Writer 07-12-2021 | 9:53 AM
Colombo (News 1st) 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப் போட்டிகளுக்கு உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் எவரும் அனுப்பப்பட மாட்டார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க விளையாட்டு வீர, வீராங்கனைகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற முடியும் எனவும் அதற்கான முழுமையான ஆதரவை அரசாங்கம் வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிப்பதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், குறித்த அறிவிப்பை வௌ்ளை மாளிகை நேற்று (06) உறுதிப்படுத்தியுள்ளது.
புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான எதிர் நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என சீனாவும் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1979 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து, 1980 ஆம் ஆண்டு மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்திருந்ததுடன் அதன் விளைவாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் பங்காளி நாடுகள் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.