பிரியந்தவின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் இழப்பீடு

பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு 1 இலட்சம் டொலர் இழப்பீடு; பாகிஸ்தான் அரசு தீர்மானம்

by Bella Dalima 07-12-2021 | 6:48 PM
Colombo (News 1st) கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவரின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதனிடையே, பிரியந்த குமார மீது தாக்குதல் மேற்கொண்ட போது, அவரின் உயிரைக் காக்க முயன்ற மலிக் அத்னானுக்கு, பாகிஸ்தான் பிரதமரால் துணிச்சலுக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் சியால்கோட்டில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேல் இலங்கை பொருளாதாரத்திற்கு பிரியந்த குமார வழங்கிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சியால்கோட்டிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய பிரியந்த குமார , கடந்த 3 ஆம் திகதி கொடூரமான முறையில் தாக்கி எரியூட்டி கொலை செய்யப்பட்டார். அன்னாரின் அஸ்தி பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டு, கனேமுல்லையிலுள்ள அவருடைய வீட்டிற்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.