காதலித்த யுவதியை கடத்திச் சென்றபோது விபத்து; துணைக்குச் சென்றவர் பலி

by Bella Dalima 07-12-2021 | 5:16 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவில் 24 வயதான யுவதி கடத்திச்செல்லப்பட்ட டிப்பர் வாகனம் வாய்க்காலில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடத்தப்பட்ட யுவதியும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஒருவர், கிளிநொச்சி - புளியம்பொக்கனையை சேர்ந்த 24 வயதான யுவதியுடன் கடந்த 4 மாதங்களாக காதல் தொடர்பு கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 7 நண்பர்களுடன் நேற்றிரவு டிப்பர் வாகனத்தில் புளியம்பொக்கனை பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்கு சென்ற குறித்த நபர் அவரை கடத்தியுள்ளார். இதன்போது, யுவதியின் உறவினர்கள் டிப்பரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது. டிப்பர் வாகனத்தையும் சந்தேகநபரே செலுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபருக்கு துணையாக வந்திருந்த 17 வயது இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடத்தப்பட்ட யுவதி காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை அடுத்து சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிச்சென்ற சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.