பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டன

by Staff Writer 07-12-2021 | 7:00 AM
Colombo (News 1st) பாகிஸ்தான் - சியல்கோட்டில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (07) அதிகாலை கனேமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நேற்று (06) மாலை 5 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவை மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உடற்பாகங்கள், கனேமுல்லை கந்தலியத்த பாலுவ பிரசேத்திலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தான் - சியல்கோட்டின் வசிராபாத் வீதி பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை பிரியந்த குமார தியவடன கொலை செய்யப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிரியந்த குமார, 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய பிரியந்த குமார, கனேமுல்லை கெந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்தவராவார். பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர் தெரிவித்தனர்.