பொடி லெசி தாக்கல் செய்த மனு பரிசீலனை

தடுப்புக்காவலில் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொடி லெசி தாக்கல் செய்த மனு பரிசீலனை

by Bella Dalima 07-12-2021 | 5:59 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்கவின் தடுப்புக்காவல் நிறைவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் வினவி, அறிக்கை சமர்ப்பிப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். தடுப்புக்காவலிலுள்ள தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பொடி லெசியும் அவரது மனைவியும் தாக்கல் செய்த எழுத்தாணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனை கூறியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதி மொஹமட் லாபர் தாஹிர் முன்னிலையில் இந்த எழுத்தாணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனது சேவை பெறுநரின் தடுப்புக்காவல் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் அதன் பின்னர் பேலியகொடையிலுள்ள விசேட விசாரணைப் பிரிவில் அவரை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் குறிப்பிட்டார். பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போது, பொடி லெசியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார். விசாரணைகளுக்காக கைதிகள் வௌியில் அழைத்துச்செல்லப்படுவதாகவும், அதன்போது அவர்களின் செயற்பாடுகளால் ஏதேனும் அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடுவதாகவும் பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் வௌியிட்ட கருத்தினூடாக, தமது சேவை பெறுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொடி லெசி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். பொடி லெசியின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பொலிஸ்மா அதிபர் கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளதாக இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் கூறியுள்ளார். தடுப்புக்காவல் நிறைவடைந்ததன் பின்னர் பொடி லெசி தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து எதிர்வரும் 13 ஆம் திகதி மன்றுக்கு அறிவிப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.