குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்

பிரியந்த குமார கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் - அஸ்கிரி, மல்வத்து பீடம்

by Staff Writer 06-12-2021 | 7:51 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியல்கோட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தி பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுதாபம் தெரிவித்து, சியம் மகா நிகாயவின் அஸ்கிரி, மல்வத்து பீடங்களினால் அறிக்கைகள் வௌியிடப்பட்டுள்ளன. இந்தக் கொடூரமான குற்றத்தை இழைத்த கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நீதியையும் நியாயமான நஷ்டஈட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடும்போக்குவாதிகளால் பிரியந்த குமார தியவடன மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற கொலையை அருவருப்புடன் கண்டிக்கும் ஆண்டகை, மதம் என்ற போர்வைக்குள் மறைந்து முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய கடும்போக்கான குற்றங்களால் ஏற்படுகின்ற பேரவலங்களை நிறுத்துவதற்கு அனைத்து நாடுகளினதும் தலைவர்கள் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.