by Staff Writer 06-12-2021 | 1:36 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (05) மாலை நண்பர்கள் மூவர், கடலில் நீராடுவதற்கு சென்றுள்ளதுடன் நீண்ட நேரம் அவர்கள் கரை திரும்பாமையால் கடற்கரையிலிருந்த சிலர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஒருவர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார்.
இளைஞர்கள் காணாமற்போன இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்தக்கரை பகுதியில் இருந்து ஒரு இளைஞரின் சடலம் இன்று (06) காலை 8 மணியளவில் மீட்கப்பட்டது.
முல்லைத்தீவு கடலில் இருந்து 06 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலம்பில் கடற்பகுதியில் மீனவர்களின் கரைவலையில் சிக்கிய நிலையில் மற்றைய சடலமும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதான இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போயிருந்த இளைஞர்களை தேடும் நடவடிக்கையில், வண்ணாங்குளம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் 5 மீனவப்படகுகள் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.