சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச 

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச 

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச 

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2021 | 4:38 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை வழங்கிய பரிந்துரைக்கமைய, சுற்றுலாத்துறையின் மொத்த கடன் கட்டமைப்பை மறுசீரமைக்க அமைச்சரவை வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தியின் நிபுணர் சபை ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தின் தீர்மானமிக்க துறையாகவும் அந்நிய செலாவணியை அதிகளவில் திரட்டும் துறையாகவும் விளங்கும் சுற்றுலாத்துறை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போது நிலவும் பெருந்தொற்று காரணமாக சீர்குலைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையில் பல தொழில் வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைக்குள்ள முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு இலங்கை அரசு, அந்த துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலா சட்டத்திற்கு பதிலாக அவசரமாக புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நிபுணர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகின்ற போதிலும் தீர்மானங்களை எடுக்கும் போது போதியளவு தனியார் துறையின் பங்களிப்பு தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்