பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க எதிர்க்கட்சி தீர்மானம்

by Staff Writer 04-12-2021 | 3:34 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இன்று (04) ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாராளுமன்ற சபை அமர்வின் போது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இன்று இந்த விடயத்தை குறிப்பிட்டார். நேற்றைய விவாதத்தின் போது மேலதிக நேரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் , ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்று தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். இந்த விடயத்தையும் பொருட்படுத்தாது இன்றைய தினம் சபைக்கு வருகை தந்த போது, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அவர் தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அறிவித்தார். கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஆலோசிக்கப்பட்ட போதும் நேற்றைய பிரச்சினைக்கு காரணமான இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, சபை நடவடிக்கையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர்.