வரலாற்று சாதனை படைத்தார் அஜாஸ் பட்டேல் 

வரலாற்று சாதனை படைத்தார் அஜாஸ் பட்டேல் 

வரலாற்று சாதனை படைத்தார் அஜாஸ் பட்டேல் 

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2021 | 2:47 pm

Colombo (News 1st) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் 10 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரராக நியூஸிலாந்தின் அஜாஸ் பட்டேல் (Ajaz Yunus Patel) வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை எதிர்த்தாடுகின்றது. தொடரின் முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமானதுடன், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா இரண்டாம் நாளான இன்று (4) 325 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணியின் சகல விக்கெட்களையும் சுழல்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் வீழ்த்தினார். 47.5 ஓவர்களை வீசிய அவர் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை கைப்பற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகையதொரு அரிய சாதனை 22 வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவின் அனில் கும்ப்ளே (Anil Kumble) 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

இந்த பட்டியலில் முதல் வீரராகக் திகழும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் சார்ள்ஸ் லேகர் (James Charles Laker) 1956 ஆம் ஆண்டு மன்செஸ்டரில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் 53 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனையை படைத்துள்ளார்.

33 வயதுடைய அஜாஸ் பட்டேல் 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்