by Staff Writer 04-12-2021 | 1:43 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் - சியால்கோட் பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனேமுல்ல - கெந்தலியத்த, பாலுவ பகுதியை சேர்ந்த பிரியந்த குமார என்பவரே பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
48 வயதான பிரியந்த குமார கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் சியல்கோட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக சேவையாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜைகள் சிலரால் பிரியந்த குமார சித்திரவதைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டதன் பின்னர் எரியூட்டப்பட்டதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமது நேரடி கண்காணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, சியால்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் முன்வந்துள்ளமை தொடர்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று கூறியுள்ளார்.