இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பாகிஸ்தானிடம் கோரிக்கை

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பாகிஸ்தானிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2021 | 8:12 pm

Colombo (News 1st) பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தாம் மிகுந்த கவலை அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் எனவும், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் தாம் நம்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சியால்கோட் – வசிராபாத் வீதியில் இலங்கையரான பிரியந்த குமார சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உலகின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான பர்ஹான் பெரசிஸ், இரண்டாவது முக்கிய சந்தேகநபரான உஸ்மான் ரஷீட் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

CCTV கெமரா காட்சிகளை பயன்படுத்தி அனைவரும் அடையாளம் காணப்படுவார்கள் என பஞ்சாப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியொன்று அகற்றப்பட்டமைக்காக, Tehreek-e-Labbaik Pakistan (TLP) எனும் அமைப்பை பின்பற்றுபவர்கள் இந்தக் கொலையை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த கொலைக்கான பொறுப்பை தம்மால் ஏற்க முடியாது என அந்த அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பை அடுத்து, இந்த அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பதிவில், இலங்கையர் கொல்லப்பட்டமையைக் கண்டித்துள்ளதுடன், இது தமது நாட்டிற்கு வெட்கக்கேடான நாள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தமது கண்காணிப்பில் கீழ், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும், பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று மாலை விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது.

பஞ்சாப் பொலிஸ்மா அதிபர், பஞ்சாப் நீதி அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு திணைக்களத்தினர் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் சியால்கோட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2011ஆம் ஆண்டில் சியல்கோட்டில் இவ்வாறான குழுவொன்றினால், 15 பொலிஸாருக்கு முன்பாக இரு இளைஞர்கள் கடுமையான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் இந்த சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியலாளராக பொறியியலில் பட்டம் பெற்ற பிரியந்த குமார தியவதன 11 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

48 வயதான இவர் கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்